Skip to main content

“முதலமைச்சர் தான் பொறுப்பு...”- வானதி சீனிவாசன் பேட்டி!

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
Vanathi Srinivasan says Chief Minister is responsible

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, காங்கிரஸ், பா.ம.க வி.சி.க, சி.பி.ஐ, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் நோட்டீஸை சபாநாயகர் அப்பாவுவிடம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று (08.01.2025) விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசினார்.

இது தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “சட்டப்பேரவையில் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம் அனைத்து அரசியல் கட்சிகளும் கொண்டு வந்தார்கள். அதற்குப் பதில் அளித்துப் பேசிய மாநில முதலமைச்சர் தன்னுடைய பதிலுரையில் அந்த வழக்கு தொடர்பாக நடந்து கொண்டிருக்கக் கூடிய விசாரணையை அளவாகக் குறிப்பிட்டு விட்டு, எந்த தொடர்பும் இல்லை என்ற அவருடைய ஆட்சியை, அமைச்சர்கள் சொன்னதை எல்லாம் மாற்றி கைது செய்யப்பட்டவர் எங்களுடைய அனுதாபி தான் என்று தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்ல அவருடைய பதில் உரையில் இந்த வழக்கில் சற்றும் பொருத்தம் இல்லாமல் பல்வேறு தகவல்களை எல்லாம் சேர்த்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கு சம்பந்தமாக நிறையப் பதில் அளித்துள்ளார். மக்கள் உங்களுக்கு ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்துள்ளார்கள். தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு நீங்கள் என்ன பாதுகாப்பு  செய்துள்ளீர்கள் என்பதைப் பற்றிக் கூறுவதை விட்டுவிட்டு பெரும்பான்மையான நேரம் அவர் முன்னாள் ஆட்சியில் இருந்த கட்சியின் உடைய செயல்பாடுகள் பற்றித் தான் அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்கள். முதல் தகவல் அறிக்கை  வெளியானதற்குக் காரணமான தொழில்நுட்ப பிரச்சனைக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதிலும் ஒரு சில அமைச்சர்கள் ஆளுநர் மீது பலி சொல்கிறார்கள்.

Vanathi Srinivasan says Chief Minister is responsible

பல்கலைக்கழக வளாகத்தில், துணைவேந்தர் நியமனத்தில் பிரச்சனை உள்ளது. எனவே இதற்கு ஆளுநர் கவனத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் கழகத்தில் நடந்ததாலும். துணைவேந்தர் நியமனத்தில் பிரச்சனை இருப்பதால் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்றால் பொது இடங்களில் நடக்கின்ற பெண்களுக்கு எதிரான அத்தனை குற்றங்களுக்கும் மாநிலத்தில் உள்ள முதலமைச்சர் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். ஏன் இதனைத் தவிர்க்கிறார்கள். வேண்டுமென்றே ஆளுநர் விவகாரத்தை மூடி மறைப்பதற்காகச் சம்பந்தமே இல்லாத பதில்களை மாநில முதலமைச்சர் சட்டப்பேரவை தெரிவித்து இருக்கிறார். அந்த பதிலில் எங்களுக்குத் திருப்தி இல்லை. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்