நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “தம்பி உனக்கெல்லாம் அரசியலில் என்ன தெரியும், நீயெல்லாம் எப்படி தாக்கு பிடிப்பாய் என கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். இந்த கேள்விகளுக்கெல்லாம் நம்ம ஸ்டைல்ல ஒரு குட்டி கதை ஒன்னு சொல்றேன். ஒரு நாட்டில் ஒரு பெரிய போர் வந்தது. அப்போது அந்த நாட்டில் பவர்ஃபுல்லான தலைமை இல்லாததால், ஒரு பச்ச புள்ள கையில் தான் அந்த பொறுப்பு இருந்தது. அதனால், அந்த நாட்டின் பெரும் தலைகள் எல்லாம் பயந்துகொண்டு இருந்தார்கள். அந்த சின்ன பையன், அந்த நாட்டோட படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு போர்க்களம் போகலாம் என்று சொன்னான்.
அப்போது அந்த பெருந்தலைகள் எல்லாம், ‘நீயே சின்ன பையன், இது பெரிய போர்க்களம். அங்கு பவர்ஃபுல்லான எதிர்கள் எல்லாம் இருப்பார்கள், களத்தில் சந்திக்கிறது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. சொன்னா கேளு இந்த போர் எல்லாம் வேணாம். போர் என்றால் படையை நடத்தனும், அதைவிட முக்கியம் அத்தனை எதிரிகளையும் சமாளித்து போரில் தாக்குப் பிடிக்க வேண்டும். அதுக்கு மேல முக்கியம், அந்த போர்ல ஜெயிக்கனும். கூட்டோ, துணையோ இல்லாமல் எப்படி நீ போரை நடத்துவாய்’ என எல்லா பெருந்தலைகளும் கேட்டப்போ, எந்த பதிலும் சொல்லாமல், போருக்கு தனியாக தன் படையோட போன அந்த பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த அந்த பையன் என்ன செஞ்சான்னு, சங்க இலக்கியத்துல ரொம்ப நல்லா தெளிவா சொல்லி இருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சுகோங்க, இல்லனா படிச்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுகோங்க. ஆனால், கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன்” என்று பேசினார்.
விஜய் கூறிய அந்த குட்டி கதையில், எந்த மன்னனை குறிப்பிடுகிறார் என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. மேலும், அந்த போர் வீரன் யார் என்று இணையவாசிகள் இணையத்தில் தேட தொடங்கினார்கள். இந்நிலையில், அந்த மன்னன் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கூறிய அந்த மன்னன், ‘தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற மன்னன் தான் என்று தெரியவந்துள்ளது. சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்த நெடுஞ்செழியனுக்கு, ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது அவரை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று கருதி, சேர மற்றும் சோழ மன்னர்கள், பாண்டிய நாட்டை நோக்கி படையெடுத்து வந்ததாகவும், அதை கண்டு அஞ்சாமல் போருக்குச் சென்ற நெடுஞ்செழியன் மன்னன் போரில் வெற்றி பெற்றதையும் புறநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கிறது.