இதுமிகப்பெரிய வரலாற்று தேர்தல். நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றால் ஸ்டாலின் அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக வரக்கூடிய நிலை இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வரக்கூடிய தகுதியும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அந்த அளவுக்கு அவருக்கு அரசியல் வேகம் இருக்கிறது என்று தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
தூத்துக்குடியில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் காங்கிரஸில் சேரப்போகிறார் என்று நான் ஏற்கனவே சொன்னேன். காங்கிரஸில் அவர் சேரப்போகிறார் என்று நான் சொன்னது உண்மையாகிவிட்டதா?
தேசிய கட்சிகளில் இருந்தவர்கள்தான் இதுவரைக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். மாநில கட்சிகளில் உள்ளவர்கள் இதுவரை போட்டியிட்டது கிடையாது. ராகுல்காந்தியிடம் அவர் என்ன பேசியிருக்கிறார், ஜெயிக்கிறமோ, தோற்கிறமோ, எப்படி முடிவாகட்டும், நான் காங்கிரஸில் சேர்ந்துவிடுகிறேன். என் மருமகன் சபரிசனிடம் கார்ப்பரேட் திமுகவை ஒப்படைத்துவிடுகிறேன். நான் சேர்ந்துவிடுகிறேன். என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்பாட்டுங்கள். ஜெயிக்கிற வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லி பேச்சுவார்த்தை நடப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
அந்த தகவலைத்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னேன். இப்பவும் அந்த தகவலை விசாரித்தேன். அது உண்மைதான் என்று சொன்னார்கள். அதற்கு தகுந்தால்போல்தான் அண்ணாச்சி துரைமுருகனும் அவர் ஜனாதிபதியாகப்போகிறார் என்று சொல்லியிருக்கிறார். அவர் ஜனாதிபதியாக வரட்டும், அமெரிக்க அதிபராகக்கூட வரட்டும். அதைப்பற்றி ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டை விட்டு போனால் சரிதான். இவ்வாறு கூறினார்.