விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க மகளிரணி பொதுச் செயலாளர் காயத்ரி. இவர் தமிழக பா.ஜ.க தலைவருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், நான் விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளராக உள்ளேன். சமூக ஆர்வலர், கட்சிப் பணி என அயராது உழைத்து வருகிறேன். மாவட்ட தலைவர் வி.ஏ.டி கலிவரதன். இவர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்படும்போதே, எனக்குக் கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கித் தருகிறேன், உன்னைப் பெரிய ஆளாக ஆக்குகிறேன் என்று நயவஞ்சகமாகப் பேசி, என்னிடம் சுமார் 5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்முறை செய்துள்ளார். என்னைக் கட்சிப் பணி செய்யவிடாமல் தடுக்கிறார். என்னைப் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டலும் விட்டார். பெண்களை இழிவுபடுத்துகிறார்.
கலிவரதனால் என் குடும்பம் தற்போது நிர்க்கதியாய் உள்ளது. என்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார். எனவே புகார் செய்கிறேன். மாவட்ட தலைவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என் வாழ்க்கைக்குத் தீர்வு காணுமாறு கோருகிறேன்.
விசாரணை அமைக்கும் குழு, விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் விசாரணை செய்தால், பல உண்மைகள் வெளிவரும். விசாரணை செய்து எனக்கு நீதி கிடைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, விளக்கம் கேட்க, கலிவரதன் செல்ஃபோன் நம்பருக்குத் தொடர்பு கொண்டோம். அவர் ஃபோனை எடுக்கவில்லை.
இதனிடையே, விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் மற்றும் மகளிரணி நிர்வாகி பேசும் ஆடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மகளிரணி நிர்வாகி: என் வயிறு பத்தி எரியுது, நீ நாசமாப் போய்டுவ.
மாவட்ட தலைவர்: கம்முனு இரு, நீ என்னை திட்டுற வேலை வெச்சுக்காதே. சரி ரைட், ஓகே.., கூல் டவுன்.., டேக் இட் ஈஸி!. நான் வேற அழுதுடுவேன்டி. கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, அது மாதிரி ஆள் நான் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு. இதுபோல இனிமேல் நடக்காது. உன் வேலையைப் பார். நீ நினைக்கறது எல்லாம் தெரியும். நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன். யார்கிட்டயும் போயிட மாட்டேன், கம்முனு விடு. இவ்வாறு செல்கிறது அந்த உரையாடல்...