விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நத்தமேடு கிராமத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி வாக்குச் சாவடி குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், “அதிமுகவில் சாதாரண தொண்டனும் முதல்வராகலாம், எந்த பதவியை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், திமுகவில் அப்படி கிடையாது. அவர்களின் வாரிசுகளைத் தவிர வேறு யாரும் பதவிகளுக்கு வரமுடியாது. திமுக மட்டுமில்லை, இந்திய அளவில் காங்கிரஸ், ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம், பி.ஆர்.எஸ். கட்சி என அனைத்திலும் வாரிசு அரசியல். உழைப்பவர்களை தேடி பதவி கொடுக்கும் கட்சி அதிமுக.
விலைவாசி உயர்வு, வரி உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் திமுக அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். யார் தலை எழுத்து என்னென்ன மாறப்போகிறதோ; இந்தியா கூட்டணி இருக்கிறதோ அல்லது சிதறுகிறதோ என்பது தெரியும்.
ஆனால், நாம் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என தெளிவாக உறுதியாக முடிவெடுத்திருக்கிறோம். இதனால், அதிமுகவுக்கு எந்த பாரமும், சுமையும் இல்லை. யாருடைய பாவத்தையும் நாம் சுமக்க வேண்டிய அவசியமும் இல்லை” என்று தெரிவித்தார்.