பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது சுற்றுப்பயணத்தை தமிழகத்திலிருந்து துவங்க இருப்பதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோவை மற்றும் நீலகிரி பாராளுமன்றத் தொகுதிகளுக்கு வந்து தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை செய்ய இருக்கிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் “ஜேபி நட்டா இன்று காலை 11 மணியளவில் தமிழகம் வர இருந்தார். ஆனால் டெல்லி விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானம் இரண்டரை மணிநேரம் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை நீலகிரி பாராளுமன்றம் மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக் கூட்டம் உள்ளது. ஜே.பி.நட்டா அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கோவை, நீலகிரி பகுதியிலிருந்து சுற்றுப்பயணத்தைத் துவங்க இருக்கிறார். மூன்று நாள் முன்பு தான் திட்ட அறிக்கை வந்தது. இந்தப் பயணத்தை முடித்து ஒரிஷா செல்கிறார். இந்தப் பயணத்தை தமிழகத்தில் இருந்துதான் துவங்க வேண்டும் என்பதற்காக இங்கிருந்து துவங்கியுள்ளார்.
பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது எனக் கேட்கின்றார்கள். கோவையில் பாஜகவிற்கு எம்.எல்.ஏ உள்ளார். மத்திய இணை அமைச்சர் முருகன் நீலகிரி பாராளுமன்றத்திற்கு கவனம் செலுத்தி வருகிறார். கோவை பகுதியின் மக்கள் பாஜகவை சார்ந்துள்ள மக்கள். தேசியம் அதிகமுள்ள பகுதி” எனக் கூறியுள்ளார்.