பிரனாப் மற்றும் மோகன் பாகவத்தின் எண்ணங்களில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 7ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அந்த அழைப்பை ஏற்றிருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரனாப் முகர்ஜி தேசம், தேசியவாதம், தேசப்பற்று குறித்து பேசினார்.
ப.சிதம்பரம், ஆனந்த் சர்மா, ரந்தீப் சர்ஜீவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரனாப் முகர்ஜியின் உரையை வெகுவாக பாராட்டி இருந்தாலும், பலர் பிரனாப் கலந்துகொண்டதற்கு ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரனாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துகொண்டது குறித்து பேசியுள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ், ‘ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே வெளிப்படையான அமைப்பாக இருந்து வருகிறது. அது முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்ததின் பேரில், அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதில் பெரும்பான்மையானவை மோகன் பாகவத்தின் எண்ணங்களை ஒத்திருந்தன. அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகள்தான் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன’ என தெரிவித்துள்ளார்.