ஊரடங்குக்கு முன்பு பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுக்கும் அ.தி.மு.க தரப்புக்குமான சந்திப்பும், அதன் தொடர்ச்சியாக சில தகவலும் வெளிவந்திருக்கிறது. செப்டம்பர் மாதம் சசிகலா ரிலீஸ் ஆவார் என்ற எதிர்பார்ப்பு எடப்பாடித் தரப்பிலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தினகரனின் கடுமையான விமர்சனம் பற்றி எடப்பாடித் தரப்பு சிறை சந்திப்பில் சசியிடம் புகார் வைத்துள்ளனர். அதற்கு சசி, தினகரன் தனியாகக் கட்சி நடத்துவதை நான் ஆரம்பத்தில் இருந்தே ஆதரிக்கவில்லை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக நான் தினகரனுக்கு எழுதிய கடிதத்தின் நகல், என் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடமே இருக்கிறது. வேண்டும் என்றால் வாங்கிப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக அரசியல் வட்டாரத்தில் சொல்கின்றனர்.
மேலும் நான் என்னைக்குமே அ.தி.மு.க.தான். நான் அக்கா ஜெயலலிதாவால் கட்சிக்குள் அழைக்கப்பட்டவள். அதனால் என்னை யாராலும் வெளியில் அனுப்பமுடியாது. நான் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத்தான் சிறைக்குள் வந்தேன். அதேமாதிரி நான் வெளியில் வரும் போதும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத்தான் வருவேன். அதனால் என் ரிலீஸ்க்கு முன்னாடியே அ.தி.மு.க.வின் பொதுக்குழுவைக் கூட்டி, என்னைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து சொல்லுங்கள் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் தனக்கு வந்ததும் எடப்பாடி சில நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியில் ஆழ்ந்துவிட்டதாகச் சொல்கின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் பெங்களூரு சிறைக்கு ஒரு கடிதம் போயிருப்பதாகச் சொல்கின்றனர். அதில், அம்மா ஜெ.’ எனக்குக் கொடுத்த கட்சியின் பொருளாளர் பதவியிலேயே நான் தொடர வேண்டும். அதேபோல் அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் சின்னம்மாவான நீங்கள்தான் இருக்க வேண்டும் என்றும், அப்போது தான், கட்சியைப் பழையபடி பலப்படுத்த முடியும். எடப்பாடி முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. அவர், அம்மாவின் நம்பிக்கையைப் பெற்ற என்னையே மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று குறிப்பிட்டிருப்பதோடு, அமைச்சர்களில் 90 சதவிகிதம் பேர், உங்களைத்தான் அம்மாவின் மறுவடிவமாகப் பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டு கூறியதாகச் சொல்கின்றனர்.