தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தமிழக முதல்வர் நேற்று (09-08-24) கோவையில் உள்ள அரசு கல்லூரியில் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் தொடங்கி வைத்த இந்த திட்டத்தை, மாவட்டம் தோறும் தொடங்கி வைக்கப்பட்டது
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “அமைச்சர் உதயநிதி ஸ்டலின் வகிக்கும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வளர்ச்சி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” என்று கூறிய பின்னர் சட்டென்று, “வரும் 19ஆம் தேதிக்குப் பிறகு தான் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் என்று கூற வேண்டும். அதற்கு முன்பு சொல்லக்கூடாது” என்று தெரிவித்தார். ஏற்கெனவே, அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்வராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.