
பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதுவரை, கவர்னர் நியமிக்கும் மூன்று பேர் கொண்ட தேடுதல் குழுவின் பரிந்துரையின் பேரில் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுவந்த நிலையில், இந்த மசோதா அதனை மாற்ற வழிவகை செய்யும். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்யமுடியும்.
இந்த சட்டமசோதா தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாநில அரசைக் கலந்தாலோசித்து துணை வேந்தரை ஆளுநர் நியமிப்பது மரபாக இருந்துவந்த நிலையில், அண்மைக்காலமாக அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் துணை வேந்தர் நியமனத்தில் தனக்கு மட்டுமே பிரத்தியேகமான உரிமை இருப்பதுபோல செயல்பட்டு, உயர்கல்வி அளிக்கும் பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் இருப்பதுபோல தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழக சட்டங்களில் உரிய திருத்தம் செய்து துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் வகையிலான சட்டமுன்வடிவு இங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.