Skip to main content

இ.பி.எஸ். வீட்டில் தேநீர் விருந்து; மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

Published on 11/04/2025 | Edited on 11/04/2025

 

Tea party at EPS house Union Minister Amit Shah participates

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அமத்ஷா 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (11.04.2025) காலை 35க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. மற்றும் அதன் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதாவது தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். அதே சமயம் அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம். எனவே தேர்தல் விவகாரங்களில் இணைந்து செயல்படுவோம். யாருக்கு எத்தனை தொகுதி ஒதுக்கீடு செய்வது, தேர்தலில் வெற்றி பெற்ற பின் எவ்வாறு ஆட்சியமைப்பது என்பது குறித்து பின்னர் விவாதிக்கப்படும்” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி உறுதியானதையொட்டி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க சார்பில், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர், நயினார் நாகேந்திரன், கரு. நாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்