Skip to main content

'திமுகவை விரைவாக நமது கூட்டணி வீழ்த்தி முடிக்கும்' -மோடி வரவேற்பு

Published on 12/04/2025 | Edited on 12/04/2025
'Our alliance will quickly defeat DMK' - Modi welcomes

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்படுவதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அமத்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் (10.04.2025) இரவு சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று (11.04.2025) காலை 35க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் மத்திய அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் அதன் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தத் தேர்தலில் தேசிய அளவில் பிரதமர் மோடியின் தலைமையிலும், மாநில அளவில் அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலும் போட்டியிடும்.

கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.விடம் இருந்து எந்த நிபந்தனைகளும் கோரிக்கைகளும் வைக்கப்படவில்லை. அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் நாங்கள் (பா.ஜ.க.) தலையிட மாட்டோம். இந்தக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அ.தி.மு.க.வுக்கும் சாதகமாக இருக்கும். 2026ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பிறகு ஆட்சியில் பங்கீடு மற்றும் அமைச்சர்கள் பங்கீடு என இந்த இரண்டும் பின்னர் முடிவு செய்யப்படும்' என தெரிவித்துள்ளார்.

nn



இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், 'வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம். மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும்  ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.

தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்