திருச்சியைக் கடந்த சில நாட்களாகப் பரபரப்பாக வைத்திருக்கும் வியாபாரிகள் போராட்டம், 'காந்தி மார்க்கெட்டை திறக்க வேண்டும்' என்ற ஒற்றைக் கோரிக்கையோடு வலுபெற்று வருகிறது.
காந்தி மார்கெட்டானது கரோனாவைக் காரணம் காட்டி மூடப்பட்ட நிலையில், அங்கு வியாபாரம் செய்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், தற்காலிகமாக ஜி கார்னா் மைதானம், உள்ளிட்ட ஒரு சில இடங்களை ஒதுக்கி வியாபாரம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
ஆனால், வியாபாரிகள் தங்களுடைய வாழ்வாதாரமே காந்தி மார்கெட்தான் என்றும் அதனைத் திறந்துவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்த நிலையில், அரசுத் தரப்பில் காந்தி மார்க்கெட் தற்போது இருக்கும் இடத்தில், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்த உள்ளதால் அந்தத் திட்டத்திற்கு இந்த இடத்தைப் பயன்படுத்த உள்ளதாகவும் சொல்லப்பட்டுவருகிறது.
இதனிடையே காந்தி மார்கெட் திறப்பது தொடா்பாக, பல்வேறு சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 'மனிதவள சங்கம்' நடத்தி வரும் கிருஷ்ணமூா்த்தி என்பவரது சார்பில், 18.08.2020 அன்று மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் பல்வேறு காரணங்களைக் காட்டி, காந்தி மார்க்கெட்டை மூடிவிட்டு கள்ளிக்குடியில் உள்ள மார்க்கெட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் காந்தி மார்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது.
அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, வணிகர்கள் சங்கம் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது. அது பலகட்ட விசாரணைக்குப் பிறகு, மீண்டும் நாளை (26.11.2020) விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், 'அறிஞா் அண்ணா மொத்தம் (ம) சில்லரை வணிகா்கள் நலச்சங்கம்' சார்பில் காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த மேல்முறையீடு குறித்துப் பேசிய அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.பி. பாபு மதுரை உயா்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தற்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை என்றும், பொதுமக்கள், வியாபாரிகள் நலன்கருதி இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாகவும், அதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளதாகவும், காந்தி மார்க்கெட்டை திறப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஒரு அறிக்கை அளித்திருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா். எனவே நாளைய தீா்ப்பு தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.