இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அதில் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுவதுமாக படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து முதல்வர் ஸ்டாலின், “ஆளுநர் அரசு கொடுத்த உரையை முழுவதுமாக படிக்கவில்லை என குற்றம் சாட்டி ஆளுநரின் உரை அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இதனை அடுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ட்விட்டரில் #getoutravi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இதனையும் தாண்டி சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #getoutravi என்ற ஹேஷ்டேக் உடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நேற்றைய சட்டப்பேரவை கூட்டம் குறித்தும் சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்தும் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளிவந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கான பொங்கல் அழைப்பிதழ் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு பதில் அளித்த அவர், “ஆளுநர் ஒரு கருத்தை சொல்கிறார். அதை அவர் எங்கேயும் கட்டாயப்படுத்தவில்லை. சட்டப்பேரவைக்கு வெளியே ஆளுநர் சொன்ன கருத்துகளில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்தால் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளுங்கள். அதைவிடுத்து போராடும் மனநிலைக்கு கொண்டு செல்கிறீர்கள் எனக் கூறுவது மற்றவர்களின் கருத்துகளுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை என்ன என்பதை காட்டுகிறது.
ஜனநாயக நாட்டில் உங்களுடைய நிலையைத் தாழ்த்திக் கொண்டு தெருச்சண்டை மாதிரிதான் செய்வோம் என்று சொல்வது உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் என்று தான் பார்க்க முடிகிறது. மாநில அரசு தங்களது விளம்பரங்களில் தலைநிமிர்கிறது தமிழகம் என்று சொல்லவில்லையா? தமிழகம் என்ன சட்டவிரோதமான வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா?
பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்றவற்றால் மக்கள் தவித்துக் கொண்டுள்ளார்கள். மக்கள் பிரச்சனைகள் ஆயிரம் உள்ளது. எது எல்லாம் பிரச்சனை இல்லையோ அதை பிரச்சனையாக்கிக் கொண்டுள்ளீர்கள். பொங்கல் விழாவிற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் லட்சினை மற்றும் தமிழக ஆளுநர் என இருந்ததற்கும் பதில் சொல்வதற்கு ஆளுநர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் நான் கிடையாது” எனக் கூறினார்.