![Vanathi Srinivasan's effort to create awareness about the convention G20](http://image.nakkheeran.in/cdn/farfuture/8c2doGPJ8K4yEJDN9-b_T0sLTqQhO5_ubGrBkR2fr2c/1673666283/sites/default/files/inline-images/578_1.jpg)
ஜி20 மாநாடு குறித்த தகவல்களை கைகளில் மருதாணி மூலமாக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் பாஜக மகளிர் அணி ஈடுபட்டுள்ளது.
நேற்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜி20 நாடுகளுடைய தலைமைப் பொறுப்பினை முதன் முறையாக இந்தியா ஏற்கிறது. டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து அடுத்த நவம்பர் இறுதி வரையிலான ஒரு வருட காலத்திற்கு ஜி20 மாநாடுகள் நடைபெற உள்ளன. அதில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை வைத்துள்ள நாடுகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். இந்தியா உலக நாடுகளுக்கு எல்லாம் தலைமை ஏற்கும் இந்த தருணத்தையும், இந்தியாவின் பெருமையை பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக உலக நாடுகளுக்கு சொல்லக்கூடிய இந்த முக்கியமான நிகழ்வையும் மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பாஜக மகளிர் அணி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் பாஜகவின் மகளிர் அணி சார்பாக ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் கோலம் போடும்பொழுது ஜி20 லோகோவை வரைந்து வருகிறோம். அந்த ஜி20 லோகோவை கைகளில் மருதாணி போடுவது மூலமாக வரைந்தோ அல்லது கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தியோ மக்களுக்கு ஜி20 மாநாடுகள் குறித்த தகவல்களை எடுத்துச் செல்லும் பணியில் பாஜக மகளிர் அணி ஈடுபட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அல்லது மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் ஜி20 நாடுகள் கூட்டத்தைப் பற்றியும் அதற்கு இந்தியா தலைமை ஏற்பது பற்றியும் உள்ள தகவல்களை எல்லாம் மக்களுக்கு தெரிவிக்க இன்று சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக விளம்பர நிகழ்ச்சியை பாஜக மகளிர் அணி துவக்கி வைத்துள்ளது. இது நாடு முழுக்க நடக்கின்றது. மக்கள் சந்திப்பு நிகழும் அனைத்து இடங்களிலும் சிறுசிறு அளவில் ஜி20 நாடுகளுடைய கூட்டங்களைப் பற்றி விழிப்புணர்வும்., பிரபலப்படுத்துவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.