நாகை மாவட்டம், எடமனலை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவரணி துணை செயலாளரான இவர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் நண்பராவார். மேலும் சில அமைச்சர்களுடனும் நெருக்கம் கொண்டிருந்த இவர் கடந்த 23ஆம் தேதி சீர்காழி பிடாரி வீதியில் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டுப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக புதுத்துறை பார்த்திபன், நீடாமங்கலம் அருண்பிரபு, புதுச்சேரி பிரேம்நாத், கொள்ளிடம் அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மதிமுக மாநில மாணவரனி துனை செயலாளர் மார்க்கோனி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழரசன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மேலபுனவாசல் எமர்சன் பிரசன்னா (28), அம்மன்பேட்டை குணசேகரன் (30) , சீர்காழி குளத்திங்கநல்லூர் மு. குலோத்துங்கன் (34) ஆகிய மூவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான மூவரில் குலோத்துங்கன் கொலையான ரமேஷ்பாபுவிடம் பணியாற்றி அதன் மூலம் பல தனியார் ஒப்பந்தங்கள் எடுத்து தொழில்செய்து வந்தவர். அதோடு, கொலை செய்ய முக்கிய குற்றவாளியாகவும் இருந்துள்ளார். குணசேகரன், எமர்சன் ஆகியோர் கூலிப்படையாக செயல் பட்டதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இக்கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் முக்கியபுள்ளிகள் சிக்குவார்கள் என்கிறார்கள் விசாரனை காக்கிகள்.