திருப்பூர் அருகே குன்னத்தூரில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய தினகரன்,
கட்சிக்கு வேகத்தடையாக இருப்பவர்கள் தான் விலகி சென்றுள்ளார்கள். ஒருவரை கட்சியில் இருந்து நீக்குகிறோம் என்றால் முறையாக விசாரித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்கிறோம். பின்னால் இருந்து இயக்குவதால் பலர் நம்மிடம் இருந்து பிரிந்து செல்கிறார்கள்.
5 பொதுத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்கிற அனைத்து சக்தியையும் இறைவன் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்னும் 20 ஆண்டுகள் உங்களோடு சேர்ந்து உழைக்கும் மன உறுதியையும், உடல் உறுதியையும் கொடுத்திருக்கிறார்.
இந்த இயக்கம் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை செயல்படுத்த உருவாக்கப்பட்ட ஜனநாயக ரீதியான ஆயுதம் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
தமிழகம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் அ.ம.மு.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்கப்பட்டுள்ளனர். கிளை, ஊராட்சி, ஒன்றியம், நகரம், பகுதி நிர்வாகிகள் நியமனம் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும்.
வருகிற 2021 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். மாபெரும் வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நமது இயக்கத்தை நிச்சயம் பதிவு செய்து விரைவில் சின்னம் வழங்கும். உள்ளாட்சி தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கிறேன். கொங்கு மண்டலம் அ.ம.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.