மே பதினேழு இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி கொடுத்த பேட்டியில் இந்த வருடம் புதிதாக தேர்தலை சந்திக்கும் தமிழக கட்சிகள் பற்றி கேட்கப்பட்ட போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மீதான தன் அதிர்ப்தியை வெளிப்படுத்தினார். அப்போது அவர்...
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தமிழ்நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை அணுகுகிற கட்சியாக நான் பார்க்கவில்லை. அவருடைய வாக்குகள் அனைத்தும் தமிழ்நாட்டில் குழப்பத்தைக் கொண்டுவரக்கூடிய வாக்குகள்தான். எந்த தத்துவத்தின் அடிப்படையில் அவர்கள் தேர்தலை எதிர்கொள்கிறார்கள் என்றோ, பாஜகவை எதன் அடிப்படையில் மாற்றணும் என்பதையோ அவர்கள் இன்னும் சொல்லவே இல்லை. வாரிசு அரசியலை மாற்றவேண்டும் என்கிறார்கள். ஆனால், அடிப்படையில் வாரிசு அரசியல்தான் பிரச்சனையா? அப்படி என்றால் கமல்ஹாசனின் மகள் அவரைப் போல நடிக்கத்தானே வந்திருக்கிறார், அவர் மனைவி நடித்தவர் தானே, அவர் சகோதரர் நடித்தவர் தானே. அவரின் மகள் நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் படித்துவிட்டு நடிக்க வந்தாரா? கமலின் மகள்தானே அவர். வாரிசு என்பதால் மட்டும் முன்னுரிமைக் கொடுக்கப்பட்டால் அது எங்கு நடந்தாலும் கேள்விக் கேட்போம். அது வேறு விஷயம்.
நாங்கள் கேட்பது அவரின் தத்துவம் என்ன? பாஜக அரசு எத்தனை மசோதாக்களைக் கொண்டுவந்தது, எத்தனை சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது? ஏனென்றால், தேர்தல் என்பது சட்டம் இயற்றுபவர்களைத் தேர்ந்தெடுப்பது தான். இது கமல்ஹாசனுக்குப் புரியவில்லையா? ஒரு இடத்திலாவது இந்த ஐந்தாண்டுகளில் இயற்றப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் குறித்து அவர் பேசியிருக்கிறாரா? அப்புறம் எப்படி சட்டம் இயற்ற நாங்கள் போகிறோம்னு சொல்கிறார்? நாங்கள் அதைக் கேட்க விரும்புகிறோம். இந்த 5 ஆண்டுகளில் பாஜக இயற்றிய மக்கள் விரோத சட்டங்கள் பற்றி அவர் பேசட்டும், இல்லையென்றால் அவர் பாஜகவின் பி டீம் என்று தான் எங்களால் சொல்ல முடியும். பாஜகவின் எந்த கொள்கையையும், மசோதாக்களையும், சட்டங்களையும் நான் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்ப மாட்டேன் என்றால் அவரை என்ன சொல்வது. புதிய கல்விக் கொள்கை பற்றிப் பேசமாட்டேன், பாரத் மாலா பற்றிப் பேசமாட்டேன், சாகர் மாலா பற்றிப் பேசமாட்டேன், ஹைட்ரோ கார்பன் எக்ஸ்ப்ளோரேஷன் பாலிசி பற்றி பேசமாட்டேன், எக்னாமிக் பாலிசி பற்றிப் பேசமாட்டேன், வேற எதை பேசுவதற்காக பாராளுமன்றத்தில் போய் உட்கார போகிறீர்கள்? பாராளுமன்றத்திற்குப் போய் சினிமா வசனம் பேசுவீர்களா?
சட்டத்தை நிறைவேற்றுவதும், அதை அமல்படுத்துவதும், அந்த சட்டத்தின் மீதான விவாதங்களை எழுப்புவதும் தான் பாராளுமன்றத்தின் வேலை. அந்த அடிப்படை அரசியலை வைத்துதான் கேள்வி எழுப்பப்படணும். வாரிசு முன்னுரிமை எல்லா துறைகளிலும் இருக்கு. சினிமாவில், நீதி துறையில், அரசியலில் எல்லா இடங்களிலும் இருக்கு. ஆனால், அது தான் அனைத்து பிரச்சனைக்கும் மையமாக பேசுவது நேர்மையற்றது.