தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், திருச்சி ஆர்.டி.ஓ உதவி தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20ம் தேதி சுயேட்சைகள் 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதன் பிறகு 21, 22 ஆகிய 2 நாட்கள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. 23, 24ம் தேதி சனி, ஞாயிறு அலுவலக விடுமுறையானது.
இந்நிலையில், இன்று முக்கிய கட்சிகள் மனுத்தாக்கல் செய்ய வந்ததால் திருச்சி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பாக திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் தடுப்பு அரண் அமைத்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை பலத்த சோதனைக்குப் பின்பே உள்ளே அனுமதித்தனர். வேட்பாளருடன் ஏராளமானவர்கள் திரண்டு வந்தபோதிலும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைவரையும் போலீசார் வழிமறித்து வேட்பாளர் உள்பட 5 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரதீப் குமாரிடம் திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் துரை வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, திருச்சி மேயர் அன்பழகன், நகர செயலாளர் மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், மதிமுக மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொகையா, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து அதிமுக வேட்பாளர் கருப்பையா மனுத்தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் மனோகரன், வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
பாஜக கூட்டணியில் உள்ள அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர், அமமுக தெற்கு மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், திருச்சி தெற்கு மாவட்ட தமாகா தலைவர் குணா ஆகியோர் உடன் இருந்தனர்.
பிறகு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்பொழுது நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, “பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி உள்ளது. ஆனால் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க, வி சி.க.விற்கு சின்னம் இதுவரை ஒதுக்கவில்லை. நாம் தமிழர் கட்சிக்கு அவர்களுக்கான சின்னம் வழங்கவில்லை. இது ஜனநாயக படுகொலை. பம்பரம் சின்னம் கேட்டுள்ளோம். பம்பரம் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போல தேர்தல் ஆணையமும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறது. இது ஜனநாயகப் படுகொலை” எனக் குற்றம் சாட்டினார்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27ம் தேதி ஆகும். வருகிற 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. 30ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பாளர் மனுவை திரும்பப் பெறலாம்.