இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''பாஜகவை எதிர்க்கிற போராட்டத்தில் நாங்கள் திமுகவோடு இணைந்து போராடுவோம். மக்கள் நலன் சார்ந்து இருக்கக்கூடிய பிரச்சனையில் மக்களுக்கு சார்பாக திமுக அரசிடம் கோரிக்கைகளை வைத்து வாதாடுவோம், போராடுவோம். இரண்டையும் ஏககாலத்தில் நாங்கள் செய்வோம்.
கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர் தமிழகத்தில் ஆளுமையாக இருந்தவர். பல்வேறு தளங்களில் நல்ல சாதனைகள் படைத்திருக்கிறார். அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் வைப்பது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நிச்சயமாக வைக்கலாம். ஆனால், அப்படி ஒரு நினைவுச்சின்னம் வைக்கின்ற பொழுது பொதுமக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படும் இடங்களில் வைக்க வேண்டாம். பெரிய ஆளுமையாக இருக்கக்கூடிய கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதே காலகாலத்திற்கும் சர்ச்சைக்குள்ளாகி இருப்பதைப் போல் ஏன் வைக்க வேண்டும்.
சர்ச்சை இல்லாத, எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற ஒரு ஒற்றைக் கருத்தை உருவாக்கி வைக்க வேண்டும். நாங்கள் முறைப்படி எல்லா அனுமதியும் பெற்ற பிறகுதான் இதை துவங்குவோம் என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்படிப்பட்ட நினைவுச் சின்னத்தை வைப்பதில் தப்பில்லை என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. நிதி நெருக்கடி இருக்கும் பொழுது கூடுதலாக பணம் இதற்காக செலவழிக்க வேண்டுமா என்ற கேள்வி எங்களுக்கும் இருக்கிறது. ஆனால், எப்படிப் பார்த்தாலும் நினைவுச் சின்னம் வைப்பதற்கு செலவு ஆகத்தானே செய்யும்'' என்றார்.