“நாளை தேர்தல் வைத்தால்கூட 200 இடங்களில் அதிமுக வெற்றி பெறும்” என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியுள்ளார்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஒட்டன்சத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், ஒன்றியச் செயலாளர் நடராஜ், முன்னாள் மேயர் மருதராஜ், நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி, நத்தம் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2 மாவட்ட கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நத்தம் விசுவநாதன், “சொத்துவரியை திமுக அரசு உயர்த்திவிட்டு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். மினி கிளினிக், லேப்டாப், தாலிக்கு தங்கம் வழங்குதல், பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குதல் உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டனர். சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கோபத்துடன் உள்ளனர். அதனால நாளை தேர்தல் வைத்தால்கூட அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.
அதன்பின் பேசிய முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சொத்து வரியை ஏற்றவில்லை. வரிவிதிப்புக்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால், அன்றைய முதல்வர் எந்த வரியையும் ஏற்ற வேண்டாம் என அந்த குழுவுக்கு அறிவுறுத்தினார். சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியதின் மூலம் கடைகள், வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. இதனால் வாடகை கட்டணம் உயரும், பொருட்களின் விலையும் அதிகரிக்கும்” என்று கூறினார்.