பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆட்சி அமைக்க காங்கிரஸ் உடன் மட்டுமே கூட்டணி என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
கூட்டணி அமைக்க பாஜக மேலிட தலைவர்கள் குமாரசாமியுடன் தொடர்புகொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து குமாரசாமி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தனிப்பெரும் கட்சியாக பாஜக 104 இடங்களை பிடித்தது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும் கைப்பற்றின.
இதில் மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்ததால் இவ்விரு கட்சிகளும் இணைந்தன. இதனால் இவ்வணிக்கு 115 இடங்கள் உள்ளன. பாஜக சார்பில் எடியூரப்பாவும், மஜத+காங்., சார்பில் குமாரசாமியும் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், இருவரில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதே பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்நிலையில், மஜத தலைவர் குமாரசாமியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை என்ற பரபரப்பு கிளம்பியதால் குமாரசாமி அதில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.