நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு திருச்சி பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பாக துரை வைகோ வேட்பாளராக களம் இறக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர் துரை வைகோவினை திமுகவைச் சேர்ந்த அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் மக்களிடையே அறிமுகப்படுத்துகிறார்கள். அதாவது, திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. அதன் வேட்பாளர் துரை வைகோ, வாக்களிக்க வேண்டிய சின்னம் தீப்பெட்டி ஆகிய விவரங்களை சொல்லி திமுக தலைமையிலான அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார்கள்.
மதிமுக வேட்பாளர் துரை வைகோ பேசுகையில் “திமுக தலைமையிலான கூட்டணிக்கு நீங்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். அப்போது தான் திமுக கொண்டு வந்த திட்டங்கள் தொடரும். இந்த அரசு தான் மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை தந்தது. அதைப்போல மகளிர்க்கு உரிமைத்தொகையினை வழங்கியது. மேலும் விடுபட்டவர்களுக்கு வழங்கிட உள்ளது. மேலும், 100 நாள் வேலைத்திட்டம் குறித்தும், அதனை தொடர்ச்சியாக செயல்படுத்தி மக்கள் பயன்படும் வகையில் செய்ய வேண்டிய தேவையையும், அவசியத்தையும் உணர்ந்து வாக்களியுங்கள்” என்றார்.
மேலும் பேசுகையில் “மத்திய அரசு கொண்டு வருகிற திட்டங்களுக்கான பணத்தை மாநில அரசுக்கு வழங்கி அவர்கள் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் மத்திய அரசு நிதியினைத் தராமல் மாநில அரசுக்கு நெருக்கடியினைத் தந்து விடுகிறது. மாநில அரசுக்கான சொந்த நிதியில் தான் தொடர்ச்சியாக அந்தந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. மேலும், பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது. இந்தியா கூட்டணியிலுள்ள கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் கேஸ் சிலிண்டர் விலையை 500 ரூபாய்க்கு கொடுப்பதாக கூறியுள்ளது. இந்த வாக்குறுதியை கட்டாயமாக நிறைவேற்றுவோம். இதனால எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்” என்றார்.
இன்னும் இரண்டு வருடங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அப்போது இதே அமைச்சர் ரகுபதியும், மெய்யநாதனும் உங்களிடையே வந்து வாக்கு சேகரிக்க வருவார்கள். அவர்கள் பொய்யான வாக்குறுதியைக் கூறிவிட்டு உங்களிடம் மீண்டும் வாக்கு கேட்க வருவார்களா? வாக்குறுதியை நிறைவேற்றி விட்டுத்தானே வருவார்கள். இதை எல்லாம் மனதில் வைத்து தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று துரை வைகோ வாக்கு சேகரித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.