கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111-லிருந்து 114 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 319 லிருந்து 326 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 748,தமிழகத்தில் 621, டெல்லியில் 523, கேரளா 327,தெலங்கானா 321,உத்தரப்பிரதேசம் 305,ஆந்திரப்பிரதேசம் 266, ராஜஸ்தானில் 288 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகிறார்.இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும் போது, கரோனா நோயை எதிர்த்து சுகாதாரத் துறையை சேர்ந்தவர்கள்,மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பணியாளர்கள், தங்களை நோய்த் தொற்றிவிடும் என்கிற கவலை கடுகளவும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள்.அவர்களைப் பாராட்டுகிறேன்,போற்றுகிறேன். ஆனால் தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாகப் பார்வையில் தென்படாமல் இருக்கிறார்.இச்சூழலில் ஏப்ரல் 5-ஆம் தேதி புதுக்கோட்டையில் தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார். ஆனால் சமீபகாலமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்குப் பதிலாகச் சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார்.இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.