ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றுப்பேசினார். அப்போது அவர்,
’’சமுதாய நன்மைக்காக கலைஞர் ஆற்றிய சேவையை இந்திய நாடே பாராட்டுகிறது. கலைஞருக்கு அடுத்து என்னுடைய பாராட்டுக்குரியவர் என் நண்பர் வைகோ.
வைகோவும் நானும் சட்டக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். அந்த நட்பு இன்றும் விரிகிறது. கொஞ்ச காலம் ஊடலிலே இருந்தபோதுகூட எங்கள் நட்பில் எந்த ஊடலும் இருந்தது கிடையாது. அரசியலிலே மாறுபட்டு இருந்த காலத்தில் நான் அவரை வெளுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் எனது நண்பர் வைகோ ஒருநாளும் ஒரு சொல் சொன்னது கிடையாது. அவர் முதன் முதலாக இந்த கட்சியை துவக்கியபோது அவர் கொடியேற்றும் விழாவிற்கு முதன் முதலில் வந்தது என் தொகுதிக்குத்தான். என்னிடத்தில் இருந்து பிரிந்துபோன இரண்டு பேர் அந்த வேலையை செய்தார்கள். அவர்கள் நினைத்தார்கள்....துரைமுருகனை வெளுத்து வாங்கிவிடப்போகிறார் வைகோ. தொலைந்தான் துரைமுருகன் என்று. ஆனால், எட்டு இடங்களில் கொடியேற்றியும், ‘துரை எப்படி இருக்கிறார்?’ என்று மட்டும் கேட்டுவிட்டு போய்விட்டார் வைகோ. இதையடுத்து என்னைப்பற்றி எதுவும் பேசாமல் சென்றதால் அவர்கள் என்னிடம் வந்து, உங்களுக்கும் வைகோவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டார்கள். சாகும் வரையிலும் நட்பு என்ற தொடர்பு இருக்கிறது என்று சொன்னேன்.
வைகோவைப்பற்றி மலருக்கு எழுதியதை நான் இங்கே படிக்கிறேன். வைகோ என் கல்லூரித்தோழர். ஹாஸ்டலில் அவர் சகவாசி..சுகவாசி. சாப்பாட்டின் மன்னன். பேச்சுப்போட்டிகளில் எதிரும் புதிருமாக நின்று நாங்கள் வாதாடுவோம். படிக்கிறபொழுதே பதற்றமாகத்தான் காணப்படுவார். படித்து முடித்தபின் நெல்லை சீமையில் சாரலாக நுழைந்தார். பின்னர் அங்கே புயலாக மாறினார். கட்சிப்பணி ஆற்றியதால் கலைஞருக்கு நெருக்கமானவர் என்ற தகுதியைப்பெற்றார். தன் உயிரை விட கலைஞரை அதிகம் நேசித்தவர்’’ என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.