தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வருகை தந்திருக்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது குடும்பத்தாருடன் வெளிநாடு சென்று ஓய்வெடுக்க முடிவு செய்தார். ஆனால் கரோனா காலம் என்பதால் அதை தவிர்த்துவிட்டு கொடைக்கானலில் ஓய்வெடுக்க முடிவு செய்தார். அதன் அடிப்படையில் நேற்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்த மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்குச் சென்றார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் பேரன், பேத்திகள் மற்றும் குடும்பத்தினர் வந்தனர்.
அவர்களை மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் மற்றும் நகரச் செயலாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கொடைக்கானல் பாம்பார் புரம் தாம்பரா நட்சத்திர ஓட்டலில் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினரும் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்கள். ஆனால் மூன்று நாள் கொடைக்கானலில் மு.க.ஸ்டாலின் தங்கி ஓய்வு எடுப்பதால் கட்சிக்காரர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. கடந்த முறை ஸ்டாலின் கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்க வந்தபோது கூட கோடை ஏரியில் போட்டிங் போனார். அதைத் தொடர்ந்து சில பகுதிகளை சுற்றிப் பார்த்து 'கோடை இளவரசி'யை ரசித்தார்.
ஆனால் இந்த முறை கரோனா காலம் என்பதால் அந்த நட்சத்திர ஹோட்டலை விட்டு வெளியே செல்லவில்லை. மேலும், மு.க.ஸ்டாலின் அதிகாலையில் எப்பொழுதும் வாக்கிங் செல்வது வழக்கம். ஆனால், தற்பொழுது கோடையில் தங்கி இருந்தாலும் கூட கரோனா பரவிவருவதை ஒட்டி வெளியே வாக்கிங் செல்லாமல் அந்த நட்சத்திர ஓட்டலில் அதிகாலையில் வாக்கிங் சென்றிருக்கிறார். அதன்பின் குடும்பத்தாருடன் ஹோட்டலில் ஓய்வெடுத்து வருகிறார். திடீரென கொடைக்கானலுக்கு மு.க. ஸ்டாலின் ஓய்வு எடுக்க வந்ததையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு ஹோட்டலுக்குள் வெளிநபர்கள் வந்து செல்லவும் அனுமதிக்கவில்லை.