Skip to main content

“வரப்போகும் தேர்தல், நமக்கு வாழ்வா சாவா தேர்தல்" - அமைச்சர் சி.வி.சண்முகம்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

 Law Minister CV Shanmugam speech about dmk and mk stalin


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதிக்குட்பட்ட ஆவணிப்பூரில், அ.தி.மு.க.வில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் சண்முகம், “தமிழகத்தில் இன்னும் ஆறு மாத காலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் இதற்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும். மே மாதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிடும். அதனால் இப்போது முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். மேலும், தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் இருந்து அவர்களுக்கான தேர்தல் பிரச்சாரம், அவர்களுக்கான செலவினங்கள் வரை ஜெயலலிதா இருந்த வரை அவர் பார்த்துக்கொண்டார். 


தற்போது, அவர் நம்மிடம் இல்லை மக்களை கவரும் சக்தி மிக்கவர் ஜெயலலிதா, அவர் இப்போது நம்மிடம் இல்லை. அவர் உயிரோடு இருந்தால் அ.தி.மு.க வெற்றியை த் தடுக்க முடியாது. தற்போது வரப்போகும் தேர்தல்  நமக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ளது. அதனால், கட்சி நிர்வாகிகள் நமது கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையோடு செயல்பட்டால்தான் அ.தி.மு.க வெற்றி பெறும். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். அ.தி.மு.க.வில் ஏழாம் தேதி ஏதாவது நடக்குமா என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். 


அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காது. தமிழகத்தில் மீண்டும் முதல்வர் துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். எனவே தி.மு.க தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது. அதை நிரூபிக்கும் வகையில் நமது கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எந்த அளவு ஒற்றுமையோடு செயல்பட்டோமோ அதேபோன்று வரும் தேர்தலிலும் செயல்பட்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்