இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு தமிழில் தனது உரையைத் தொடங்கினார். முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார். உரையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ட்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டப்பேரவை நிகழ்வுக்குப் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திமுக கூட்டணிக் கட்சிகள் ஒரு கேவலமான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். தங்கள் அரசாங்கத்தினுடைய திறமையின்மையை மறைக்கவும், நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய லஞ்ச ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும், அவர்களுடைய வாரிசு அரசியலைப் பற்றி மக்கள் அதிகம் பேசாமல் பார்த்துக் கொள்ளவும் 'கவர்னருக்கு எதிர்ப்பு' என்கின்ற ஒரு பெரிய கேவலமான நாடகத்தை இன்று அவர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
மரியாதைக்குரிய இந்த மாநிலத்தினுடைய கவர்னர் உரையாற்றுகின்றபொழுது ஆளும் கட்சி தங்களுக்கு ஏதோ சம்பந்தம் இல்லாததைப் போல கூட்டணிக் கட்சிகளைத் தூண்டிவிட்டு அவருடைய உரையை அதுவும் தமிழ் பாட்டி அவ்வையாருடைய அழகான தமிழ் வரிகளைக் கூறி ஆரம்பித்த அந்த உரைக்கு எதிராக கோஷமிட்டு தொந்தரவுகளைக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல கவர்னருடைய உரை என்பது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எவையெல்லாம் மாநில அரசாங்கம் தயாரித்து கொடுக்கிறதோ அதை அவர் படிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் கவர்னரை தங்களுடைய சித்தாந்தத்தை புகழ் பாடக்கூடிய ஒருவராக இந்த ஆளுகின்ற அரசாங்கம் நினைக்க முடியாது. எவையெல்லாம் இந்த அரசாங்கத்தின் செயல்களோ திட்டங்களோ அதைத்தான் தங்களுடைய உரையில் ஆளுநர் குறிப்பிடுவார். அதுதான் பாரம்பரியமாக இருக்கக்கூடிய மரபு. ஆனால் தங்களுடைய சித்தாந்தத்துக்கு எதிராக வெளியிடங்களில் ஆளுநர் பேசுகிறார் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தவர்கள் இன்று சட்டப்பேரவையை ஒரு களமாக மாற்றி இருக்கிறார்கள். இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம்.
இந்த மாதிரியான ஆளுங்கட்சியினுடைய போக்கு என்பது மாநில நலனுக்கு உகந்தது அல்ல. அவர் எதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பேசினார் என்று மாநில அரசு, கவர்னர் அலுவலகத்தில் கேட்க வேண்டும். மாநில அரசு கவர்னரின் உரையைக் கூட பேசி சரியாக அவரிடம் ஒப்புதல் வாங்காமல் பிரிண்ட் எடுத்துக் கொண்டு வருகிறீர்கள் என்று சொன்னால் நீங்கள் உங்களுடைய அதிகாரத்தை அவர் மீது காட்ட வேண்டும் என நினைக்கிறீர்களா? இல்லை நீங்கள் நினைப்பதைத் தான் கவர்னர் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்த விஷயங்களைப் பொறுத்தவரை மாநில அரசு ஆளுநர் அலுவலகத்துடன் உறவு பேணாத நிலையைக் காட்டுகிறது. இது ஆளுநரின் மீதான தனிப்பட்ட தாக்குதல். அவர் பேசி முடித்ததற்கு பின்பு தமிழக முதல்வர் அவருக்கான ஜஸ்டிபிகேஷனை சொல்கிறார். ஆனால் இன்று இருக்கின்ற நிலைமை என்ன? ஆளுங்கட்சிக்கோ அரசாங்கத்திற்கோ ஸ்போக் பெர்சன் உண்டு. ஆனால் கவர்னர் அலுவலகம் பொதுவாக எந்த விஷயங்களையும் வெளியில் சொல்வதற்கு வாய்ப்பு கிடையாது. நீட் தேர்வை பொறுத்தவரை தேவையான தகவல்களைச் சொல்லி இருக்கிறோம் என இந்த அரசு சொல்கிறது. வெளிப்படையாக நீங்கள் அறிவிப்பீர்களா? என்ன விளக்கத்தை ஆளுநர் கேட்டார். என்ன விளக்கத்தை இந்த அரசு கொடுத்திருக்கிறது என மக்கள் முன்னாடி அறிவிக்க வேண்டும்'' என்று ஆவேசமாகப் பேசினார்.