ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் எடப்பாடி அரசை கண்டித்து நாளை (28-ந்தேதி) நடத்தவிருந்த போராட்டத்தை ரத்து செய்திருக்கிறது பாமக தலைமை!
போராட்டத்தை திடீரென வாபஸ் பெற்றிருப்பது குறித்து நாம் விசாரித்தபோது,‘’ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து நேற்று (26.01.2020) இரவு ஆலோசித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது,’’நமது கூட்டணியில் பாமக இருப்பது அவசியம். பாமக இருந்தால்தான் வட தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும். ரஜினி பக்கம் பாமக சாய்வதாக செய்திகள் வருகிறது. (முதன்முதலில் நக்கீரனிலும் நக்கீரன் இணையத்தளத்திலும் பதிவு செய்திருந்தோம்). அது நடக்கக்கூடாது. டாக்டர் (ராமதாஸ்) நம் பக்கம் வைத்துக்கொள்வதுதான் சரி. அதனால், நமது அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் இருக்க பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாமே‘’என செங்கோட்டையனிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி.
அதற்கு செங்கோட்டையன், ’’பொதுத்தேர்வை நடத்த வலியுறுத்துகிறது மத்திய அரசு. இருப்பினும், பொதுத்தேர்வு நடந்தாலும் குழந்தைகள் யாரும் இதில் பாதிக்கப்படமாட்டார்கள். அனைவரும் தேர்ச்சிப் பெறுவர் என்கிற ரீதியில்தான் அரசாணை போட்டிருக்கிறோம்’’ என விவரிக்க, இதனை அப்படியே டாக்டர் ராமதாசிடம் சொல்லி போராட்டத்தை கைவிட வலியுறுத்துங்கள் என கேட்டுக்கொண்டார் எடப்பாடி.
அதேபோல, ராமதாஸை தொடர்பு கொண்டு பேசிய செங்கோட்டையன் இதனை விவரிக்க, நீங்கள் சொல்வது மகிழ்ச்சிதான். ஆனா, பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அது குறித்து யோசியுங்கள் என ராமதாஸ் சொல்ல,’’ பொதுத்தேர்வு நடத்துவதில் எங்களுக்கும் உடன்பாடில்லைதான். நிச்சயம் பரிசீலிக்கிறோம்‘’ என செங்கோட்டையன் கொடுத்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்திருக்கிறார் ராமதாஸ் ‘’என்கிறார்கள் அதிமுக மேலிட தொடர்பாளர்கள்.
இதனை அடுத்து, பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் ராமதாஸ் விவாதிக்க, போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார் ஜி.கே.மணி.