திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![politival leaders pays tribute to k.anbazhagan](http://image.nakkheeran.in/cdn/farfuture/_62vWBS-7FKuBKsnbEgWVlFY9jWIAAIU2MYZ4oERWXU/1583557941/sites/default/files/inline-images/sfgvsfgvsd.jpg)
சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனும் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அன்பழகனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திட எல்லாம்வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.
தமிழ்நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மாணவர் பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்தவர். கற்றவர்கள் பலரும் அரசியலில் வருவதற்கு தூண்டுகோலாக இருந்தவர் அவர். கட்சியிலும், ஆட்சியிலும் தாம் வகித்த பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் பேராசிரியர் அவர்கள். திமுகவில் இருந்தாலும் அரசியல் எல்லைகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாலும் நேசிக்கப்பட்டவர்; மதிக்கப்பட்டவர் ஆவார்.
என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அரசியலில் அதிசயங்களாக திகழ்ந்தவர்கள் வெகுசிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்கள். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவுக்கும் பேரிழப்பாகும்.
பேராசிரியர் க. அன்பழகனாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு! இனமானப் பேராசிரியருக்கு விசிக சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தையும், அவரை இழந்து நிற்கும் திமுகவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.