நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அண்மையில் ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளதை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நாளை மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்படுவதற்கான சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம் கூட இருக்கிறது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. நேற்று கோவை மாவட்டத்தில் காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் காணொளி வாயிலாக மு.க.ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ''சொந்த மாவட்டமான சேலத்திற்கு இபிஎஸ் என்ன செய்தார் என்று அதிமுகவினரால் பட்டியல் போட முடியுமா? சேலத்திற்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சிதான். நேற்றைய தினம் எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, திமுக பொய்யான, கவர்ச்சியான வாக்குறுதிகளை தந்ததாக ஒரு குற்றத்தை சாட்டியுள்ளார். நான் உறுதியோடு சொல்கிறேன்.
எந்த நேரத்திலும் இதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 70 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்பது மக்களுக்குத் தெரியும். சொன்னதோடு சேர்த்து சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் நாம் நழுவவிட்ட வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் மீட்க வேண்டும்'' என்று பேசினார்.