சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், எம்.ஜி.ஆரின் சிலையை திறந்து வைத்து, தனக்கும் எம்.ஜி.ஆருக்குமான பந்தத்தை தெரிவித்தார்.
’’நான் இப்போது வாழ்க்கையில் சந்தோசமாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். சார்தான். நான் உடல்நலம் இல்லாமல் விஜயா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தபோது, தொலைபேசியில் மருத்துவர்களிடம் விசாரித்துவிட்டு, டிஸ்சார்ஜ் ஆகி சென்றதும் என்னை அழைத்து, நடிகனுக்கு உடல்நலம்தான் முக்கியம் அதை பார்த்துக்க தம்பி என்று எனக்கு அறிவுறுத்தினார். அப்போது, திருமணம் நடக்கும்போது தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படியே லதாவுடனான காதலை என் அண்ணனிடம் கூட சொல்லாமல் முதலில் எம்.ஜி.ஆர். சாரிடம் தான் முதலில் சொன்னேன்.
லதா என்னை காதலித்தாலும் அவர் வீட்டில் எனக்கு பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. எம்.ஜி.ஆர். சார்தான் அவர்களிடம் சொல்லி, அவன் கொஞ்சம் கோபக்காரன் அவ்வளவுதான். மற்றபடி நல்லவன் நம்பி பெண் கொடுங்கள் என்று அவர் சொன்னதால்தான் எனக்கு லதாவை திருமணம் செய்து வைக்க அவர் வீட்டினர் சம்மதம் தெரிவித்தார்கள்.
ராகவேந்திரா திருமண மண்டபத்தை கட்டுவதற்கு ஒருவர் தடையாக ஒருந்தார். எனக்கு அது பெரும் மன உளைச்சலாக இருந்தது. எம்.ஜி.ஆர். சார்தான் அந்த நபரை வீட்டிற்கு அழைத்து கண்டித்து, எனக்கு ராகவேந்திரா மண்டபம் கட்ட அனுமதி வாங்கித்தந்தார்.
சினிமாவிலும் அரசியலிலும் ராஜாவாக இருந்தவர் எம்.ஜி.ஆர். சார். மக்கள் திலகத்தின் ஆட்சி என்ன சாதாரண சாதனையா? 13 ஆண்டுகள் சாதாரண ஆட்சியா நடத்தினார். கரண்ட் இல்லாத கிராமங்களுக்கு கரண்ட் கிடைத்தது. ஒவ்வொரு குடிசையிலும் ஒவ்வொரு விளக்கு இலவசமாக எரிந்தது. கிராமங்களுக்கு ரோடு போட்டாங்க. 13 ஆண்டுகளும் ஒரு கிலோ அரிசியை ஒன்னே முக்கால் ரூபாய்க்கு தாண்டாமல் கொடுத்தார். மூன்று ஒரு பங்கு மாணவர்களூக்கு மட்டுமே கிடைத்து வந்த மதிய உணவை எம்.ஜி.ஆர் சார்தான் மதிய உணவு திட்டம் என்று எல்லா மாணவர்களூக்கும் சாப்பாடு போட்டார். அந்த காலத்தில் சைக்கிளில் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடித்துவிடுவார்கள். ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால் அந்த டபுள்ஸ் சட்டத்தை மாற்றினார் எம்.ஜி.ஆர். யார் மேல் வேண்டுமானாலும் சந்தேகத்தின் பேரில் வழக்கு பதியலாம் என்று இருந்த நிலைமையை மாற்றினார். 20 ஆயிரத்திற்கும் மேல் ரேசன் கடைகள் அமைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தார். அதனால்தான் அவர் அமெரிக்காவில் படுத்திருந்தபோதும் அவருக்குத்தான் ஓட்டு குத்துனாங்க ஜனங்க.
அந்த மாமனிதரின் சமாதியில் இப்போதும் ஜனங்க காது வைத்து வாட்ச் சத்தம் கேட்குதா என்று பார்க்கிறாங்க. அவர் தெய்வப்பிறவி.
எத்தனையோ பேருக்கு அவர் எத்தனையோ உதவிகள் செய்து வாழ வைத்திருக்கிறார். அத்தனை பேரில் நானும் ஒருத்தன்.
சினிமாவில் இருந்து வருகிறவர்கள் எல்லோரும் அரசியலில் எம்.ஜி.ஆர். ஆக முடியாது என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன்...சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. எம்.ஜி.ஆர். ஒரு யுக புருசர். பொன்மனச்செம்மல். மக்கள் திலகம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவரைப்போல் ஒருவர் பிறக்க முடியாது. அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு.
எம்.ஜி.ஆர் மாதிரி ஆவேன் என்று சொன்னால் அவனைப்போல் ஒரு பைத்தியக்காரன் இருக்க முடியாது. ஆனால், அவர் கொடுத்த அந்த நல்லாட்சி, அந்த ஏழைகளுக்கான ஆட்சி, சாமான்ய மக்களுக்கான் ஆட்சி என்னால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ’’
படங்கள்: எஸ்.பி.சுந்தர்