தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பாஜக முன்னாள் நிர்வாகி பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் பழைய சோறு டாட் காம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். சென்னை, பாண்டிச்சேரி, கோவை என மூன்று ஊர்களில் நடத்தி வருகிறேன். கோவையில் எனக்கும் அந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே உள்ள விவகாரத்தின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அப்போது நான் பாஜகவில் இருப்பதால் அந்த உரிமையாளர் நேரடியாக பாஜக தலைவர் அண்ணாமலையை சென்று பார்க்கிறார். அங்கு உரிமையாளர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை.
உடனடியாக மாவட்டத் தலைவர் உத்தம ராமசாமியை, அண்ணாமலை தொடர்பு கொண்டார். இதன் பின் மாவட்ட நிர்வாகிகள் உத்தம ராமசாமி தலைமையில் வந்து எனது அலுவலகத்தில் இருந்த பொருட்களை எல்லாம் திருடி அங்கு பாஜக கொடியை நட்டு பாஜக போர்டு வைத்துள்ளார்கள். அதில் பாஜக சேவை மையம் என வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட சேவை செய்வார்கள் எனத் தெரிந்திருந்தால் அந்தக் கட்சிக்கே நான் வந்திருக்கமாட்டேன். சொந்த கட்சிக்காரர்களை என்ன ஏதென்று கேட்காமல் என்னையும் விசாரிக்காமல் முழுக்க முழுக்க ஆட்களை வைத்து உடைத்துள்ளார்கள். இப்போது 20 குண்டர்கள் அங்குள்ளார்கள். நான் போனாலும் என்னை உள்ளே விடாமல் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள்.
கடைக்கு நான் கொடுக்க வேண்டிய தொகை 5 லட்சமாகவே இருக்கட்டும். நீதிமன்றம் என்னை குற்றவாளி எனச் சொன்னால் நான் சிறை செல்லத் தயாராக உள்ளேன். வழக்கு இருக்கும் போது அங்கு எப்படி பொருட்களை எடுக்க முடியும். அதை உடைக்க முடியும். கட்சியில் இருந்து என்னை நீக்கியதாக நேற்று காலைதான் தெரியும். யார் நீக்கினார்கள் என்றெல்லாம் தெரியாது. இந்த விவகாரத்தில் நேரடியாக அண்ணாமலை இணைந்துள்ளார். நான் அவர் மேல்தான் புகார் அளித்துள்ளேன். மொத்த பொருட்களின் மதிப்பு 20 லட்சம். அதை எங்கு வைத்துள்ளார்கள் என்பது கூடத் தெரியவில்லை” எனக் கூறினார்.