
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது, "இது பெண்களுக்கான ஆட்சி என பெண்களே பாராட்டும் வகையில் சிறப்பான திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. இது சிலருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்கள் மத்தியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் எதிர்கட்சியினர் பச்சை பொய்யை சொல்லி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பெண்கள் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தாங்கிக் கொள்ள முடியாமல் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல நாடகம் போட்டுப் பார்த்தனர் மேலும், திராவிட மாடல் அரசு பெண்களை ஏமாற்றி விட்டது போல சிலர் சொல்ல முயற்சிக்கின்றனர். அதில் வெற்றி பெற முடியவில்லை. இந்த தருணத்தில் பெண்களுக்கு திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு சொத்துரிமை, காவல் நிலையத்தில் பணி, வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழு என வீட்டிற்குள் முடங்கி இருந்த பெண்களை வெளியே வர வைத்தது திமுக அரசு. திருமண உதவி திட்டம் மூலம் பெண்களை படிக்க வைத்ததும் திமுக அரசுதான்.
இப்படி கலைஞர் வழியில், பெண்களுக்கு உயர்கல்வி படிக்க உதவியாக புதுமைப் பெண் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார். இதன் மூலம் 4. 97 லட்சம் பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பொறுத்தவரை, 1. 15 கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில், பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை, ஒரு காலத்தில் எள்ளி நகையாடினார்கள். இந்த திட்டத்தை கேலி பேசியவர்கள் இன்று பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இப்படி நாட்டிற்கே முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கிறது.
கடந்த, 31.3.2021 வரை மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம், 15 லட்சத்து 88 ஆயிரம் பெண்கள் பயன்பெற்று உள்ளனர். 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வைத்திருந்தவர்களுக்கு தள்ளுபடி செய்ததில் பெண்கள் பலர் பயன் பெற்றனர். \மகப்பேறு விடுப்பு காலம், தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு,. ரூபாய் 12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி உள்ளோம்.
தொழில் முனைவோருக்கு 15 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. புதிய தொழில் துவங்கியதன் மூலம் பல பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இப்படி, நாட்டிலேயே அதிக பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதுவெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல சிலர் விமர்சிக்கின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு விசயத்தில், அரசு எந்த சமரசமும் செய்வதில்லை. சமூக நலத்துறை, காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவரை புகார் கொடுக்க முன் வரச் செய்வது, வழக்கு பதிவு செய்வது, அந்த வழக்கை வேகப்படுத்துவது என செயல்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அரசு துறைகள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அங்கு ஒன்று, இங்கு ஒன்று என குழந்தைகளுக்கான எதிராக நடக்கும் சில குற்றச்செயல்கள் கூட, வெளியே வராத நிலை இருந்தது. இது தொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியதன் காரணமாக, புகாரும், அந்த புகாரின் மீதான உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
மகளிர் காவல் நிலைய எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாநில அளவில் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டவருக்கு சாதகமான தீர்ப்பு வந்திருந்தால் கூட, அரசு மேல்முறையீடு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில், , கடந்த, 2022ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், 1 லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது பாலியல் வன்புணர்வு வழக்குகளில் தேசிய சராசரி 4.6 சதவீதம். இது, தமிழகத்தில் இது 0.7 சதவீதம்தான்.
பெண்கள் பாதுகாப்பாக பணியில் சேரும் சூழல் தமிழ்நாட்டில் உள்ளது. இதனால் பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்கு செல்லுதல் என சுயசார்புடன் செயல்படுகின்றனர். நாட்டின் உற்பத்தி துறையில் 43 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என ஒன்றிய அரசின் அறிக்கையே கூறி இருக்கிறது. இப்படி இருக்கையில், வேண்டுமென்றே திராவிட மாடல் அரசு மீது குற்றம்சாட்டி, தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்கு பெற செய்யாமல் செய்ய சிலர் நினைக்கின்றனர். ஆனால், மக்கள் அவர்கள் முகத்தில் கரியை பூசுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தமிழ்நாட்டில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதில் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கச் சொல்லுங்கள். குற்ற ஆவண காப்பக 2022ம் ஆண்டு அறிக்கையில், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகளை பொறுத்தவரை, இந்திய அளவில் 83,344 வழக்குகள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும், 11,512 வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 1,414 வழக்குகள் மட்டுமே. மேலும் மற்றவர்களது ஆட்சி போல நாங்கள் எதையும் மறைக்க விரும்பவில்லை. எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். வெளிப்படைத் தன்மையுடன் இந்த ஆட்சி நடைபெறுகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக, இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் துணிச்சலாக புகார் கொடுக்க பெண்கள் முன் வருகிறார்கள். குற்ற எண்ணிக்கை அதிகம் என்ற குற்றச்சாட்டுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும். இருப்பினும் எங்களது ஆட்சியின் வெளிப்படைத் தன்மையான நடவடிக்கையால், ஒரு கட்டத்தில் குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
கடந்த அதிமுக ஆட்சியில் எப்ஐஆர் போடவே போராட வேண்டியிருந்தது. அரசின் திட்டங்களை தவெக தலைவர் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களிடம் பேசி, அவர் தெரிந்துக் கொள்ள வேண்டும். பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்ற அதிமுகவும், தவெகவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றாற்போல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் உள்நோக்கம் என்ன என்பது விரைவில் வெளிவரும் "என்றார்.