ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7ல் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், பாஜக - அதிமுக கூட்டணியில், ஈரோடு கிழக்கு தொகுதி கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கத்தை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், அதிமுகவின் மற்றொரு தரப்பான ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். வரும் 23 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளார்.
மறுபுறம் தேமுதிக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்து படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்து நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணி குறித்தே தேமுதிகவின் இடைத்தேர்தல் வியூகமும் இருக்கும் என்பதால் தனித்துப் போட்டியிடுவதா அல்லது விரும்பும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்ற மனநிலையில் தேமுதிக தற்போது இருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து முடிவு செய்ய அந்தக் கட்சியும் வரும் 23 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், “தேமுதிக தலைமை அலுவலகத்தில் வரும் ஜனவரி 23, காலை 10 மணிக்கு மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உட்கட்சி தேர்தல், இடைத்தேர்தல், செயற்குழு, பொதுக்குழு மற்றும் கழக வளர்ச்சி போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது” எனக் கூறியுள்ளார்.
அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு இருக்கும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்று தனது ஆதரவினைத் தெரிவித்தார். இதனால் வரும் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க தனது கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 23 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.