
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கணொளி காட்சி மூலம் இன்று (09.03.2025) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். அப்போது அவர், ‘கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கிறது என்பது குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பொறுப்பாளர்களை உடனடியாக நியமித்து சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க வேண்டும். அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கோஷ்டி பூசல் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, ‘திருச்சி மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் திமுக அமைச்சர்களுடன் தொடர்பிலிருந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் அந்த தொடர்புகளை எல்லாம் மறந்துவிட வேண்டும். கடந்த காலங்களில் திருச்சி மாவட்டம் அ திமுகவின் கோட்டையாக இருந்தது. அதே நிலைமையை வரும் சட்டமன்ற தேர்தலில் உருவாக்க வேண்டும். இதற்காகத் திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றியாக வேண்டும். அவ்வாறு கட்சி விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படாத கட்சி நிர்வாகிகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என பகிரங்கமாக எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.