
தமிழ்நாட்டில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எதிராகப் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசோ பொருளாதார வழியாகவும், கலாச்சாரப்படை எடுப்பு என்ற வகையிலும் தொடர் தடைகளை அளித்து வருகிறது. காலத்தாற் மேற்கொள்ளப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் போராட்டக் களத்திற்கு உணர்வுடன் துணை நிற்போம், நிற்கவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் ஆளுநர் ஆர்.என். ரவி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, ‘வம்புமிகு‘ ஆளுநராகவே, நம் மக்களின் வரிப் பணத்தை ஊதியமாக வாங்கி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அப்பட்டமான ஒரு கொள்கைப் பிரச்சாரகராகவே அன்றாடப் பணி செய்து, அரசமைப்புச் சட்டப்படி, தான் பதவியேற்கும்போது எடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் எதிரான போக்கையே நடைமுறையாக்கிக் கொண்டு வருகிறார். அந்தப் பணி செய்யவே ஒரு ‘போட்டி அரசாங்கத்தை’ – தி.மு.க. ஆட்சி, அதன் கொள்கை முடிவுகள், நடவடிக்கைகளுக்கு எதிராக – தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பொல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறார். உச்சநீதிமன்றம் தொடங்கி ஊர் மக்கள் வரை எதிர்ப்புகள் எழுந்தன.
அதுபற்றியே எண்ணாமல், மக்கள் விரோத நடவடிக்கையில் கூச்சநாச்சமின்றி நடந்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், சிந்துவெளி நாகரிகம், சரஸ்வதி கலாச்சாரமாம். (திராவிட நாகரிகமே என்ற சர். ஜான் மார்ஷலின் கருத்தியலை மறுத்து அல்லது மறைத்து) இப்படி ஒன்றிய பா.ஜ.க. அரசின் வரலாற்றுப் புரட்டு – ஆரிய – திராவிடம் என்பது பெரியார் கூறியது. வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதை என்று வாய்க்கால் புளுகுண்ணிகளின் பிரச்சாரம்” எனத் தெரிவித்துள்ளார்.