திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் முனியாண்டி போட்டியிடுகிறார். இதனையொட்டி அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் துணை முதல் அமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ''ஒரு பக்கம் துரோகி, மறுபக்கம் எதிரி. இரண்டையும் நாம் தேர்தல் களத்தில் சந்தித்து வெற்றி பெற வேண்டிய சூழலில் இருக்கிறோம். எப்படி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் நாம் பணியாற்றினோமோ, அதேபோல் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரை நினைவில் வைத்து பணியாற்ற வேண்டும்.
ஏனென்றால் நாம் ஒரு தொண்டரைத்தான் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். தொண்டராக இந்த இயக்கத்தில் இணைந்து இயக்கத்துக்காக உழைத்த தொண்டர். ரொம்ப அப்ராணி. பார்த்தால் சாதுவாக தெரிகிறது. பால் வழியும் முகம். பகுதி கழக செயலாளராக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து செயலாற்றி வந்திருக்கிறார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தெந்த பகுதியில் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா கூறுவார். அதனை ஏற்று பணியாற்ற வேண்டும். ஏற்கனவே பல்வேறு இடைத்தேர்தல்களை சந்தித்து வெற்றிகளை பெற்றிருக்கிறோம். அதேபோல இந்த தேர்தலிலும் அனைத்து பொறுப்பாளர்களும் அந்தெந்த பகுதியில் தங்கியிருந்து பணியாற்றி வெற்றிபெற உழைக்க வேண்டும்'' என்றார்.