அரியலூர் தொகுதிக்குட்பட்ட கல்லக்குடி, பழனியாண்டி நகர், பளிங்காநத்தம் கிராமத்தில், நியூ ஜெனரேசன் பீப்பிள்ஸ் பார்ட்டி (புதிய தலைமுறை மக்கள் கட்சி) -யின் 'பானை' சின்ன வேட்பாளரான தங்க சண்முக சுந்தரம், முதல் கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணத்தை துவங்கினார். நியூ ஜெனரேசன் பீப்பிள்ஸ் பார்ட்டி, தமிழக மக்கள் நல்லாட்சிக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வருகிறது.
அப்போது, "தமிழகம் முழுவதும் போட்டியிடும் விவசாயிகளும், விவசாய நலன் சார்ந்த அமைப்புகளும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போது, விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் செலுத்துவோம். நெல் கொள்முதல் நிலையங்களில் நடைமுறைச் செலவுகளுக்காகப் பணமாக விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்டும் 30 ரூபாயை இனி அரசே வழங்க வழிவகை செய்வோம். நாட்டிலேயே முதன் முறையாக அரிசிக்கான ரூ.50 மானியத் தொகையை விவசாயிகளிடம் வழங்கி கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்போம்
இதன் மூலம் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும், நேரடியாக விவசாயிகள் பலனடைவர். இதனால் நல்ல தரமான அரிசியை விவசாயிகளே பக்குவமாகத் தயாரித்து வழங்குவர். விவசாயிகளுக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் 4 சதவீத ஆண்டுவட்டியில் கடன் வழங்கப்படும். தவணை மாறாமல் கட்டுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக 4 சதவீத வட்டியும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், கடனை முறையாகக் கட்டும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 'தங்க மங்கை' விருதும் 'தங்கப் பதக்க'மும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
ரூ.100 என்ற நிரந்தர விலையில் அனைவருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் அனைவருக்கும் ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். விலையில்லா மண் பானை ஃபிரிட்ஜ், மண்பானை குக்கர், மினி கல் உரல், அம்மிக் குழவி, நாட்டு ரக ஆடுகள், மாடுகள், கோழிகள் வழங்கப்படும். சீமை கருவேலச் செடியை வேருடன் பிடுங்கித் தந்து சுற்றுச்சூழலுக்கு உதவிடும் பள்ளி மாணவர்களுக்குத் தலா ஒவ்வொரு செடிக்கும் ரூ.1 வழங்கப்படும்" என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.
சன்னாவூர் கிராமத்தில், தலையில் வைக்கோல் சுமந்து, மாட்டுடன் தங்க சண்முக சுந்தரம் பிரச்சாரம் செய்ததும் வாக்காளர்களிடையே தேர்தல் செலவுக்கு மடியேந்தியதும் காண்போரை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.