
2019 மக்களவைத் தேரத்ல் ஏப்ரல் 18ம் தேதியான நேற்று பரபரப்பாக நடந்தது. பெரிய அளவில் கலவரம், பிரச்சனைகள் நடக்காவிட்டாலும் கூட, சில இடங்களில் நடக்கவே செய்தது. கடலூர் தொகுதியில் உள்ள சாத்தியம் கிராமத்தில் அதிமுக திமுகவினரிடையே வாக்கு சாவடி முன்பு ஓட்டுக்கேட்கும்போது பிரச்சனை ஏற்பட்டது. இதனால் இருதரப்புக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலையில் போலீஸ் புகுந்து லேசான தடியடி நடத்தி கும்பலை கலைத்தது.
அதேபோல் வேப்பூரிலும் லேசான தடியடி நடத்தி கும்பலை கலைத்தது. ஆரணி தொகுதியில் உள்ள மேல்மலையனூர் அதிமுக ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி மகன் சத்தியராஜிக்கு வாக்குசாவடியில் நடந்த மோதலில் அரிவாள் வெட்டு விழுந்தது. பாண்டிச்சேரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்பி தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் பகுதியில் ஓட்டுக்காக கட்சிகள் கொடுத்தன. இதில் 50 ருபாய் நோட்டுகள் கள்ளநோட்டாக இருந்ததால் பரபரப்பு நிலவியது.
கடலூர் தொகுதியில் இந்திரா நகரில் நெய்வேலி என்எல்சி ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும்போது அவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று சொல்லிவிட்டனர். இதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர்.

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பில்தான் பெரிய பதட்டம் ஏற்பட்டது. அங்கு விடுதலை சிறுத்தைகள், அதிமுக, பாமக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு காரணம், அதே ஊரில் மணிமேகலை என்பவர் கடை வைத்துள்ளார். அந்த கடையில் மாற்றுத்திறனாளியான வீரபாண்டியன் என்பவர் வேலை செய்கிறார். இவர் வாக்களிக்க சென்றபோது, ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறினார். அதிமுகவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னதால் கைகலப்பு ஏற்பட்டது.
கைகலப்பான விசயத்தை அதிமுக, பாமகவினரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து அந்தக் கட்சியினர் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் சின்னமான பானையை நடுரோட்டில் போட்டு உடைக்கின்றனர். இதனை தட்டிக்கேட்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போகும்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அந்த வழியே சென்ற சுப்பிரமணியம் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதாக அதிமுக மற்றும் பாமகவினர் கட்டைகளுடன் சென்றனர். தாக்குதல் நடத்திய நபர்கள் இல்லை என்றவுடன், காலணியில் உள்ள வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஒரு இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தேவா, அஜய், செல்வராஜு, ரவி உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் பாமக, அதிமுகவைச் சேர்ந்த வெற்றி, ராஜா, சசி உள்பட சிலருக்கு காயம் ஏற்பட்டது. தலித் அல்லாத தரப்பு வீடுகளும் தாக்கப்பட்டதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 50க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் பொன்பரப்பியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் அங்கனூரில் கள்ள ஓட்டு போட வந்ததாக கூறி சிலரை வாக்குச்சாவடியில் உள்ள பாமக பூத் ஏஜெண்ட் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை வினோத்தின் வீட்டில் புகுந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்தும் இந்த விரோத்தினால் ஆங்காங்கே மோதல் வரலாம் என்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.