
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 29ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அரசியல் என்றால் என்னங்க ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? காட்சிக்கு திராவிடம் ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி, மக்கள் விரோத மன்னர் ஆட்சியை நடத்துகின்ற இவர்கள் நமக்கு எதிராக செய்கின்ற செயல் ஒண்ணா? ரெண்டா?
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே... ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என அழைக்கப்படுது. இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதுக்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அது பாசிச ஆட்சிதானே. பாத்துக்கிட்டே இருங்க அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான ஒரு தேர்தலை சந்திக்கும். இதில் இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்னு த.வெ.க இன்னொன்னு தி.மு.க” என்று பேசி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், த.வெ.க தலைவர் விஜய் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது விழா சிறப்பு கவிதை கருத்தரங்கம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, “உரத்த குரலில், கையை தூக்கிக் கொண்டு நேற்று வரை நடிகராக இருந்தவர்கள், அரசியலுக்கு வந்து 1 சதவீதம் கூட பொதுமக்களை சந்திக்காதவர்கள், கூட்டத்தைக் கூட்டி கொண்டு திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி என்று சொல்கிறார்கள். அப்படி சொன்னால், அவரையும் இந்த திமுக சந்திக்கும். 2026இல் மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் தான் வருவார்” என்று தெரிவித்தார்.