
உலகெங்கமுள்ள இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான, ரம்ஜான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டில் வரும் மார்ச்31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் ஒரு மாதம் அதிகாலைப் பொழுதில் இருந்து நோன்பு இருந்து தொழுகையில் ஈடுபட்டு இறைவனை வணங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, சாலைகளில் தொழுகை நடத்தக் கூடாது என உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மீரட் காவல்துறை தெரிவித்துள்ளதாவது, ‘சாலைகளில் பெரிய கூட்டம் தொழுகை நடத்தினால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், மசூதிகள் மற்றும் ஈத்காக்களில் மட்டுமே தொழுகைகள் நடத்தப்பட வேண்டும். சாலைகளில் யாராவது தொழுகை செய்வதை கண்டறியப்பட்டால் அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவுகளை மீறுபவர்களின் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமை போன்றவை ரத்து செய்யப்படும். மேலும், அவர்கள் மெக்காவிற்கு புனித யாத்திரைக்கு செல்ல முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.
இதே போன்று, சம்பல், அலிகார், பாக்பத் போன்ற முஸ்லிம் அதிகம் வாழும் பகுதிகளிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசின் இந்த உத்தரவுக்கு சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், ரம்ஜானுக்கு முன்னதாக கடைசி வெள்ளிக்கிழமை தொழுகை இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.