
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான, ரம்ஜான் பண்டிகை இன்று (31-03-25) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் கடந்த ஒரு மாதமாக அதிகாலைப் பொழுதில் இருந்து நோன்பு இருந்து தொழுகையில் ஈடுபட்டு இறைவனை வணங்கி வந்தனர்.
இஸ்லாமியர்களின் நம்பிக்கைப்படி பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, உலகெங்களில் உள்ள அனைத்து மசூதிகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், இந்த பண்டிகைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி... ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.