
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது. அப்போது, கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கோயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் ஆஜரானார். அப்போது அவர், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தமிழக அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, திரெளபதி கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த யாரேனும் முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தார்.
இதற்கிடையில், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போரட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்ன வாதம் அனைத்து பச்சைப் பொய் எனவும், திமுக அரசின் போலி சமூகநீதி முகத்திரையைக் கிழித்து மேல்பாதி மக்களை அழைத்துக் கொண்டு விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில், முதல்வர் பொறுப்பேற்ற பிறகு எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கை தான். திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கையே, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு அந்தந்த மதத்தினர் விரும்புகின்ற வழிபாடுகளை நடத்துவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரெளபதி கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கின்றனர். அந்த கோயிலுனுடைய பூஜை முறைகள் அன்றாடம் நடத்தப்படுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். இன்னும், ஒரு வாரத்தில் அந்த கோயில் திறக்கப்பட இருக்கிறது. எதையல்லாம் இந்த ஆட்சி முன்னெடுத்து பல சிரமங்களை கடந்து நடத்துவதற்குண்டான காலம் கணிந்து வருகின்ற போது அதற்கு போராட்டத்தை அறிவித்து அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர். அரசியல் நாடகத்தை அரங்கேற்றி அரசியல்வாதிகள் நிறைந்த இந்த தமிழகத்தில் உண்மையே பேசி உண்மை பக்கம் நிற்கும் முதல்வரின் உணர்வுகளை தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள்” என்று தெரிவித்தார்.