Skip to main content

'திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை...'- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published on 20/11/2024 | Edited on 20/11/2024
;thanjavur teacher incident..'- Edappadi Palaniswami condemns

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி (வயது 26). இவர் வழக்கம் போல் இன்று (20.11.2024) பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சின்னமணி என்ற கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் குத்தி கொலை செய்தார். மதன்குமார் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் ரமணி வரும் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை ரமணியை மதன்குமார் ஒரு தலையாகக் காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் தர மறுத்ததால் ஆத்திரத்தில் மதன்குமார் இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மதன்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்குத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

;thanjavur teacher incident..'- Edappadi Palaniswami condemns

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்க தவறியுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணி அவர்களின் கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், விடியா திமுக முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்