
அண்மையில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவானது விரைவில் மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வக்பு வாரியம் தனிப்பட்ட முறையில் தங்களுடைய சொத்துக்களை கணக்கிட முடியாது; வக்பு வாரியம் ஒரு சொத்தை உரிமைகோரும் பொழுது அது அரசின் சொத்தாக இருந்தால் குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் மூலமாக அது அரசின் சொத்தாக வகைமாற்றம் செய்ய முடியும் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வக்பு வாரிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை பல்வேறு மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், இஸ்லாமிய அமைப்புகளும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வாணியம்பாடியில் ரமலான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு பட்டை அணிந்து ரமலான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் உமராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்கள், பள்ளிவாசல்களில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கடந்த 30 நாட்களாக நோன்பு கடைபிடித்த இஸ்லாமியர்கள் புது ஆடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்புத் தொழுகை நடத்தினர். இந்த தொழுகையில் இஸ்லாமியர்கள் மத்திய அரசு கொண்டு வரும் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர் .