
சென்னையில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கிருக்கும் பூட்டிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு, இளைஞரின் உடல் ஒன்று வெட்டுக் காயங்களுடன் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் வேளச்சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரியவந்தது.
சேதுபதி என்பவரோடு கடந்த 4 மாதங்களாக அந்த குடியிருப்பு வீட்டில் வாடைக்கு இருந்த வெங்கடேஷை கொலை செய்தது அவருடைய முன்னாள் வாகன ஓட்டுநர் கார்த்திக் என்பது போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் தெரியவந்தது. வெங்கடேஷை கொலை செய்துவிட்டு தலைமறைவாக கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.