எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அ.தி.மு.க.வில் ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மேல்முறையீடு வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்ராமன் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், 'கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்புகள் மேற்கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனுதாக்கல் செய்ய முனைத்துவரும் நிலையில், தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த உத்தரவும் விதிக்கக்கூடாது என இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. அதேபோல் அதிமுக தலைமையக மோதல் தொடர்பான வழக்கும் நடைபெற்றும் மறுபுறம் வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.