பாட்டாளி மக்கள் கட்சி புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கோவையில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு பொதுக்குழு வழங்குகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக பாமக வெளியிட்டள்ள செய்திக் குறிப்பில்:-
இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 2019-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும் இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானவை ஆகும். அதை உணர்ந்தே மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க. தயாராகிறது.
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றாலும், மத்திய அரசு பெரியண்ணன் போக்குடன் தான் நடந்து கொள்கிறது. மாநிலங்களின் உணர்வுகளையும் மதிப்பதில்லை; மாநிலங்களின் உரிமைகளையும் கொடுப்பதில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கால் கடுமையாக பாதிக்கப்படுவது தமிழ்நாடு தான். நீட் தேர்வு கட்டாயம், இந்தித் திணிப்பு, காவிரி உள்ளிட்ட ஆற்று நீர் பிரச்சினைகளில் துரோகம், தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படாதது என தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வறட்சி நிவாரணம், வர்தா புயல் பாதிப்புகள், ஒக்கி புயல் பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய நிதி உதவிகள் கூட வழங்கப்படவில்லை. 2015&-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு ரூ.13,731 கோடி நிதி கோரியது. ஆனால், மத்திய அரசு வெறும் ரூ.1940 கோடி மட்டுமே வழங்கியது. இது கேட்டதில் 15% மட்டும் தான். 2016-&-ஆம் ஆண்டில் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலுக்காக தமிழக அரசு ரூ.22,573 கோடி கோரியது. ஆனால், கிடைத்தது ரூ.266.17 கோடி மட்டும் தான். இது கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு மட்டுமே. 2017&-ஆம் ஆண்டு வறட்சிக்காக தமிழக அரசு கோரியது ரூ.39,565 கோடி. ஆனால், கிடைத்தது ரூ.1748 கோடி தான். இது தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 4% மட்டும் தான். 2017&-ஆம் ஆண்டில் ஒக்கி புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு கோரியது ரூ.9300 கோடி. ஆனால் கிடைத்தது ரூ.133 கோடி மட்டும் தான். இது 1.5% நிவாரண உதவி மட்டுமே.
இப்போதும் கூட காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கஜா புயலால் சிதைக்கப் பட்டுள்ளன. புயல் தாக்கி ஒன்றரை மாதங்களாகி விட்டன. மத்தியக் குழு தமிழகத்தில் ஆய்வு செய்து திரும்பி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டன. ஆனால், தமிழகத்திற்கு இன்னும் நிவாரண உதவிகள் கிடைத்தபாடில்லை. உதவிக்காகவும், நிதிக்காகவும் தங்களிடம் கையேந்தும் நிலையில் தான் மாநில அரசுகளை மத்திய அரசு வைத்திருக்கிறது என்று தமிழக அமைச்சர் ஒருவரே ஒப்புக் கொள்கிறார்.
இந்த அவலநிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான். பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழகத்தின் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும், தொடர்வண்டித்துறை இணையமைச்சராகவும் இருந்த போது தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசில் பா.ம.க. வலிமையாக இருந்த போது தான் ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.
இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை பாட்டாளி மக்கள் கட்சி வகுத்து வருகிறது. இதற்காக ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்தப் பொதுக்குழு வழங்குகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.