Skip to main content

பெட்ரோல், டீசல் விலை... மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் உள்நோக்கம் என்ன? ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம்

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

 

கச்சா எண்ணெய் விலை ஏறும் போது தினசரி பெட்ரோல், டீசல் விலையை ஏற்றிய எண்ணெய் நிறுவனங்கள், விலை இறங்கும் போது தினசரி இறக்காதது ஏன் ?. மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதன் உள்நோக்கம் என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கும் போது பைசா கணக்கில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பது கடும் கண்டனத்திற்குரியது.  

 

E.R.Eswaran




கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தி புதிய உச்சம் தொட்டதை நாம் பார்த்திருக்கிறோம். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் போது அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது.


2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 111.80 டாலராக இருந்த போதே பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.76 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 61.12 ரூபாய்க்கும் தான் விற்கப்பட்டது. அதேபோல கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 59.31 டாலராக இருந்த போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.68 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 68.27 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
 

 

ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 31.02 டாலராக இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 73.33 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 66.75 ரூபாய்க்கும் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்வது மக்களை ஏமாற்றும் செயல். கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறைந்திருக்க வேண்டும்.


மூலப்பொருட்களின் விலை குறைந்திருக்கும் போது அதிலிருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசலின் விலையை குறைப்பது தான் நியாயம். கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தின் போது மக்கள் தலையில் சுமையை இறக்கி வைப்பதும், விலை வீழ்ச்சியின் போது மொத்த இலாபத்தையும் எண்ணெய் நிறுவனங்களே எடுத்துக் கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது.



தினசரி விலை மாற்றத்தை கொண்டு வந்ததே மத்தியில் ஆளும் இந்த பாஜக அரசு தான். கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றத்தை ஏற்படுத்தாமல் கார்பரேட் நிறுவனங்கள் இலாபம் அடைய பாஜக அரசு மவுனமாக இருக்கிறாதா என்ற சந்தேகம் எழுகிறது.



தற்போது ஏற்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலை சரிவை வைத்து கணக்கிட்டு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு கீழும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 40 ரூபாய்க்கு கீழும் எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை ஒப்படைத்துவிட்டோம் என்று தப்பித்து விடக்கூடாது.
 

 


கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன் ?. எனவே கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் சரிந்திருக்கும் போது அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் குறைந்தால் கச்சா எண்ணெய் கொள்முதலில் வருடத்திற்கு 10,000 கோடி மிச்சமாகும். இப்போது 25 டாலர் குறைந்திருக்கிறது. 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி மிச்சமாகும். அந்த லாபம் அரசுக்கா, கார்பரேட் நிறுவனங்களுக்கா ?. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்